சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் வாகனப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல் (வயது 52). இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் கால்டுவெல், 'நான் போலீஸ் உயர் அதிகாரியாக உள்ளேன். அதனால் உன் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன். அதோடு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று கூறி அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் கணவன் மனைவி போன்று தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கால்டுவெல் மீது புகார் அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தியதுடன் என்னிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டார் என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முறையான அறிவிப்பும் தகவலும் தெரிவிக்காமல் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இதனால் காவல் துறையினர் இவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால் அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு பெண்ணிடம் மோசடி செய்தது ஏமாற்றியது உறுதியானது.
இதையடுத்து மேலும் இவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி சிறப்பு எஸ்ஐ கால்டுவெல் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற துறை ரீதியான விசாரணைகளுக்கு கால்டுவெல் ஆஜராகாமல் இருந்து வந்தார். அச்சூழலில் அவரது முன் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கால்டுவெல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை மாநகர மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் கோபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கால்டுவெல்லை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.