திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் கால்வாயை ஒட்டிய கரைப்பகுதியில் இன்று மதியம் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர் சிற்றரசு உள்ளிட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரை மற்றும் அவரது சகோதரர் சோமு என்கிற சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை செய்த போது, அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ஆய்வாளர் மோகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிற்றரசு, அசோக் ஆகியோரை வெட்டியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் காவல் துறையினர் துரை மற்றும் சோமு இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.
இவர்கள் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் புதுக்கோட்டையில் ஜாமீன் கையெழுத்திட சென்றபோது அவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், இவர்கள் மீது திருட்டு மற்றும் கொள்ளை கொலை என மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது காயமடைந்த இரண்டு ரவுடிகள் மற்றும் 3 காவலர்கள் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்தியப்பிரியா பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் பதவியேற்றதில் இருந்தே திருச்சியில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நாளை திருவாரூர் செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இரு ரவுடிகள் இன்று திருச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் திருச்சியில் உள்ள ரவுடிகளின் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.