சென்னையில் எஸ்.பி.ஐ டெபாசிட் இயந்திரங்கள் குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அமீரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட அமீரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நண்பனான வீரேந்தருடன் சேர்ந்து 6 இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். சென்னை ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி பகுதிகளில் கொள்ளையடித்ததாக அமீர் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும், வீரேந்திருடன் அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்ததாகவும், தங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்ததாகவும், ஹரியானா பகுதியைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் அமீர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கொள்ளையடித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்திருக்கிறான். இதனால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து அமீரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.