திருச்சி மாவட்டத்தில் தினமும் கிலோக்கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது அண்மை நாட்களில் வாடிக்கையாகியுள்ளது. தினமும் குறைந்தது 2 அல்லது 3 பேரை காவல்துறையினர் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (26/07/2021) திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்துவதாக மாநகர காவல்துறை ஆணையர் தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், டோல்கேட் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தனிப்படையினர், விமான நிலைய பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா என்பவரது காரை வழிமறித்து சோதனை செய்ய முயன்ற போது காரை நிறுத்தாமல் சென்னை தேசிய நெடுஞ்சாலை பக்கம் காரைத் திருப்பியுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த தனிப்படை காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது, சரவணன் என்ற காவலர் காரின் முன் பக்கத்தில் பாய்ந்து காரை நிறுத்த எச்சரித்தும் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். காவலரும் காரின் முன் பக்க போனட் பகுதியைப் பிடித்து தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளார். இறுதியாக சென்டர் மீடியனில் மோதி கார் நின்ற பிறகு தனிப்படை காவல்துறையினர் முகமது ஹனிபாவை மடக்கிப் பிடித்து கைது செய்ததோடு, அவரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது, காரின் முன்பக்கம் தொங்கிக் கொண்டு சென்ற சரவணன் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த தனிப்படையினர் காரை பறிமுதல் செய்ததோடு முகமது ஹனிபாவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.