தமிழக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவு என்ற இலக்குடன் தேர்தல் கமிஷனும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் இருந்து மாநகர துணை கமிஷனர் முத்தரசு தலைமையில் புறப்பட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார், பொன்மலைப்பட்டி கடைவீதி வழியாக பொன்னேரிபுரம் வரை அணிவகுப்பு நடத்தினர். இதே போல மீண்டும் முன்னாள் ராணுவ வீரர்கள் காலனியில் இருந்து புறப்பட்டு எஸ்.ஐ.டி. வரை அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் உதவி கமிஷ்னர்கள் காமராஜ், ராஜு, தங்கவேல், முருகவேல், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், திருவானந்தம், அஜீம், போக்குவரத்து ஆர்.ஐ.கள் ரமேஷ், ஸ்ரீதர், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.