திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை மற்றொரு வழக்கில் போலீசார் மூன்று ஆண்டுகளாக வெளியில் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து ஆறு லட்சம் ரூபாய் திருடிய வழக்கு ஒன்றில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். அதே நேரத்தில் வேறொரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து புழல் சிறையில் குற்றவாளி விக்னேஷ் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் இந்த தகவல் தெரியாத அரும்பாக்கம் போலீசார் பல இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக விக்னேஷை தேடி வந்தனர். அண்மையில் புழல் சிறையில் உள்ள கைதிகளின் கைரேகைகளை கணினியில் பதிவேற்றம் செய்து புதுப்பித்தது சிறைத்துறை. அந்த கைரேகையில் விக்னேஷின் கைரேகை இருப்பது கண்ட அரும்பாக்கம் போலீசார் அதிர்ந்தனர். அப்பொழுதுதான் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் இளைஞர் விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கே தெரியவந்தது. உடனே புழல் சிறைக்கு சென்ற போலீசார் விக்னேஷை மீண்டும் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.