கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று காவல்துறை கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதி, கோட்டைமேடு அடுத்த பெருமாள் கோவில் வீதி பகுதியில் வசித்து வரும் பிரியா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மட்டுமே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தது.
ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். செல்போன் மூலம் பிரியா வகுப்புகளை கவனித்து வந்தார். அப்போது இயற்பியல் ஆசிரியர் வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். மேலும் பிரியாவிடம், “ நீ அழகாக இருக்கிறாய்” என்று கூறி பேசியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது வகுப்புகள் பள்ளியில் நடைபெற்று வரும் சூழலில் பிரியா பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இயற்பியல் ஆசிரியர் பிரியாவிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பிரியா மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இதுபற்றி தனது தோழிகளிடம் அழுது புலம்பியுள்ளார். இந்த தகவல் பிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில், மாணவி பிரியா கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் வீட்டிலிருந்து போலீஸார் பிரியா எழுதியுள்ள ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில், தனது பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என எழுதிவைத்துள்ளார். அதனையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறும்போது; பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் மாணவியைச் சேர்க்க ஏற்பாடு செய்துவந்த நிலையில், மாணவி தூக்கு போட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பிரியா, தனது ஆண் நண்பரிடம், தான் முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாணவி கூறியதாக அவருடன் பயிலும் சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியக்கூடாது என பள்ளி நிர்வாகத்தினர் மாணவிக்கு உளவியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை” என்றார்.
ஆசிரியர் மிதுன், இதுகுறித்து பேச மறுத்துவிட்டார். மேலும், “பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது” என்றார். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். மேலும், நடப்பாண்டில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வகுப்பு எடுப்பதில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.