திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவிற்கு சென்ற புகாரையடுத்து அனுமதியின்றி பணம் வைத்து சீட்டு விளையாடிய நபர்களிடம் இருந்து 76 ஆயிரத்து 690 ரூபாய் பணம், 10 செல் போன்கள், 6 இரண்டு சக்கர வாகனங்கள், சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 23 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூக்ஸ் கிளப்பிற்கு வருவாய்துறையினர் மூலம் சீல் வைக்கப்பட்டது.
முசிறியில் உள்ள கூக்ஸ் கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வருவதாக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற பிரிவிற்கு புகார் சென்றது. புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி முசிறி போலீசாருக்கு உத்தரவு வர பெற்றது. இதையடுத்து முசிறி போலீஸ் டி.எஸ்.பி அருள்மணி, முசிறி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று அதிரடியாக கூக்ஸ் கிளப்பை சோதனை நடத்தினர். அப்போது புதுக்கோட்டை, குளித்தலை, லால்குடி, முசிறி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 23 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து 76 ஆயிரத்து 690 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சீட்டு கட்டுகள், 10 செல்போன், 6 பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் விதிமுறைகளை மீறி சீட்டு விளையாடிய 23 பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். கூக்ஸ் கிளப்பிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் முசிறியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.