சேலத்தில் ஓராண்டுக்கு முன்பு மாயமானதாகச் சொல்லப்பட்ட தலைமைக் காவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரைக் கொன்றதாக நெருங்கிய நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (51). சேலம் மாநகர காவல்துறையில், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். தீவிர மதுப்பழக்கம் கொண்டவரான இவர், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி முதல் திடீரென்று பணிக்கு வரவில்லை. காவல்துறை தரப்பில் விசாரித்தபோது அவர் வீட்டிற்கும் செல்லவில்லை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, ஜெயராமன் மாயமானது குறித்து அவருடைய மனைவி மாலா, சேலம் மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். உதவி ஆணையர் வெங்கடேசன் நேரடியாக விசாரித்து வந்தார். இதற்கிடையே, ஜெயராமனுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள், அலைபேசி ஆகியவற்றை அவருடைய நண்பரான பஞ்சர் குமார் என்கிற விஜயகுமார் என்பவரிடம் இருந்து மீட்டதாக அவருடைய மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், காவல்துறையினர் பஞ்சர் குமாரை பிடித்து விசாரித்தனர். காணாமல் போனதாகக் கருதப்பட்ட தலைமைக் காவலர் ஜெயராமனும், பஞ்சர் குமாரும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கருமந்துறை மலைப்பகுதிக்குச் சென்று ஒன்றாக சாராயம் குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் போதையிலேயே சேலம் நோக்கி வந்துள்ளனர். ஜெயராமன் உச்சக்கட்ட போதையில் இருந்ததால் அவரால் வாகனத்தில் அமர்ந்து வர முடியவில்லை. போதையில் சரிந்து விழுவது போல் இருந்தார்.
இதனால் பயந்து போன பஞ்சர் குமார், காரிப்பட்டி பகுதியில் ஒரு மரத்தடியில் அவரை இறக்கிவிட்டுவிட்டு அவர் மட்டும் சேலத்திற்கு வந்துவிட்டதாக விசாரணையின்போது பஞ்சர் குமார் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைக கைப்பற்றினர். பல நாள்கள் ஆகியும் சடலத்தைக் கேட்டு உரியவர்கள் யாரும் வராததால், அந்த சடலத்தை காவல்துறையினரே அடக்கம் செய்து விட்டனர்.
அதேநேரம், ஜெயராமனை மரத்தடியில் இறக்கிவிட்டு வந்தது குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என பஞ்சர் குமாரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். மேலும், ஜெயராமனின் வாகனம், அலைபேசி ஆகியவற்றை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதனால் பஞ்சர் குமார் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. ஜெயராமனின் மனைவி, பஞ்சர் குமாரிடம் தனது கணவர் குறித்து விசாரித்தபோதும் கூட, அவர் எங்கு சென்றார் என்று தனக்குத் தெரியாது என மழுப்பலாகக் கூறியுள்ளார். இதையடுத்து பஞ்சர் குமாரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சம்பவத்தன்று அவரும், தலைமைக் காவலர் ஜெயராமனும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விவகாரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பஞ்சர் குமார், அவரை அடித்துக் கீழே தள்ளி விட்டதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் ஜெயராமன் மாயமான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, பஞ்சர் குமாரை ஜன. 11ம் தேதி கைது செய்தனர். தலைமைக் காவலர் ஒருவர் மாயமான வழக்கு ஓராண்டுக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.