
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த அதிகாரி நல்லு மற்றும் குற்றப் புலனாய்வுத் தனிப்பிரிவு ஆய்வாளராக புறநகர்ப் பகுதியில் பணியாற்றிய கோமதி ஆகியோர் மாதம் தவறாமல் ஆய்வாளர்களிடம் இருந்து கப்பம் வாங்கிக்கொண்டு வந்துள்ளனர். இதில் டி.எஸ்.பி. நல்லு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எந்த மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளாமல், அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களிடம் இருந்து மாதம் தவறாமல் ஒரு காவலரை நியமித்து கப்பம் மட்டும் வாங்கி வந்ததாகவும், பயோ டீசல் விற்பனையிலும் கொடிகட்டி பறந்ததாகவும், ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் கல்லா கட்டியதாகவும் காவல்துறையில் இருப்பவர்களே தெரிவித்திருந்தனர். இதனை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
மேலும் திருச்சி மாநகரக் குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய ராமானுஜம், தொடர்ந்து பல ஆண்டுகளாக திருச்சியில் இருந்துகொண்டு அதிகாரிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் காரணமாக காட்டி, ஒரே ஊரில் பணியாற்ற அவர் செய்த தந்திரங்களைப் பற்றியும் நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
நாம் வெளியிட்ட செய்திகளின் எதிரொலியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக பணியில் இருந்த அதிகாரிகளை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.எஸ்.பி. ஆக பணி இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.