அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குட்டைகரை காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 24). டிப்ளமோ படித்துள்ள இவர் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள வில்வகுளம் என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது 21 வயது மகள் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பட்டதாரி பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காதலர்களாக பழகி தனிமையில் இருந்து வந்த நிலையில், சித்ராவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சித்ரா, "நாம் காதலர்களாக பழகியதில் நான் ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டேன். இனியும் காலம் தாழ்த்தாமல் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்று செந்திலை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், செந்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சித்ரா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலரை கணவராகச் சேர்த்து வைக்குமாறு புகார் ஒன்றை அளித்தார்.
சித்ராவின் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், செந்தில் மற்றும் சித்ரா இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையம் வரவழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக இருவரின் பெற்றோர்களும் உறுதி அளித்தனர். அதன்படி ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.