அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகே கடந்த 19 ஆம் தேதி சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அதனை அவ்வழியாக சென்ற ஊர் மக்கள் பார்த்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார், அந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் கை, கால், தலை பகுதிகளில் ரத்தக்காயங்கள் இருந்தன. அதனால் அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. கம்புசக்கை மற்றும் கருவேலம் முட்களை உடலின் மீது போட்டு எரித்ததால் உடல் முழுவதும் எரிந்தும் எரியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது.
அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர்? எனத் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அவை ஆனந்தவாடி சாலையில் 1 கி.மீ. தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு (எ) சுரேஷ்குமார் (23) என்பதும், இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி-சிதம்பரம் சாலையில் உள்ள மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இவரைக் கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து சுரேஷ்குமாரின் ஊர் மற்றும் அவர் பணி செய்த சுங்கச்சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், காமராஜ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்ட காவலாளி சுரேஷ்குமார், மணிகண்டன், காமராஜ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். 9 மாதங்களுக்கு முன்பு மது குடிக்கும் போது காமராஜ் செல்போனை சுரேஷ்குமார் திருடியுள்ளார். இதனைக் கண்டுபிடித்து பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், சுரேஷ்குமார் செல்போனை நண்பர்களிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று 3 பேரும் மது குடிக்க ஆனந்தவாடி டாஸ்மாக் கடைக்கு வந்து உள்ளனர். சென்னிவனம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது மது போதையில் மீண்டும் செல்போனை கொடுக்குமாறு கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். அப்போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், காமராஜ் ஆகியோர் கயிறால் சுரேஷ்குமார் கழுத்தை இறுக்கி அங்கிருந்த கொட்டகையில் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்துள்ளனர். பின்னர், சுரேஷ்குமார் கைகளைக் கட்டி தங்கள் இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்து சாலையோரம் போட்டு உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சுரேஷ்குமாரிடம் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீசார், செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.