கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் மனுத்தாக்கல் செய்திருந்ததையடுத்து, இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரை விசாரணைக்கு ஒரு நாள் போலீசார் காவலில் விசாரிக்க வாங்கல் போலீசார் கரூர் நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதன்படி, கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.