அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல்நிலைய எல்லையில் உள்ளது கீழராயபுரம். இந்த ஊருக்கு அருகே ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஒதுக்குப்புறமாக இருக்கும் டாஸ்மாக் கடை என்பதால் ஏராளமான மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது அருந்துகின்றனர்.
நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தூரத்தில் இளைஞர் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். பின்னர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்த அந்த உடலைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரின் உடலுக்கு அருகே மது பாட்டில்கள் சிகரெட் துண்டுகள் ஆகியவை சிதறிக் கிடந்தன. மேலும், அந்த இளைஞரின் உடல் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனால், அப்பகுதியில் கூட்டாக மது குடிக்க வந்த நண்பர்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இவரைக் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக எரிக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும், அல்லது வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றுள்ளனரா என்றும் பல கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மதுபான கடை அருகே மர்மமான முறையில் இளைஞர் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.