Skip to main content

ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக வெட்டிக் கொலை; காவல்துறை விசாரணை

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Police investigation about Auto driver passed away
கோப்புக்காட்சி

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, ஆட்டோ ஓட்டுநரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (37). ஆட்டோ ஓட்டுநர். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தார். வீட்டிற்கு அருகிலேயே விவசாய நிலம் உள்ளது. 

 

இந்நிலையில், நவ. 20 ஆம் தேதி மாலை, முரளி தனது விவசாய நிலத்தில் கட்டியிருந்த மாட்டை பிடித்து வருவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை திடீரென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். முரளியின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்த 11 வயதான அவருடைய மகள் ஓடி வந்தார். அதற்குள் முரளி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள், உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி முரளி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், முரளிக்கும் அவருடைய தம்பி தேவராஜ் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததும், அதனால் அவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க தேவராஜ் திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. ஆய்வாளர் குமரன் தலைமையிலான தனிப்படையினர் அவரைத் தேடி வருகின்றனர். அவரைப் பிடித்து விசாரிக்கும்பட்சத்தில் கொலைக்கான முழுப் பின்னணியும் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.  

 

 

சார்ந்த செய்திகள்