திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்துவரும் பாலசுப்ரமணியன் (எ) தேஜஸ் சுவாமிகள் (31) என்பவர் சமீபத்தில் வழக்கறிஞரோடு உரையாடும் ஆடியோ பதிவு, வாட்ஸ்ஆப் மூலம் பரவி திருச்சியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல புதிய உயர் அதிகாரிகள் தனக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 42 ரவுடிகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் போடலாம் என்றும் பேசியிருந்தார். அதன் காரணமாக திருச்சியைச் சேர்ந்த சில ரவுடிகள் தன்னை வந்து பார்த்ததாகவும், எனவே உங்களுக்குத் தெரிந்த ரவுடிகளைக் கவனமாக இருக்கச் சொல்லவும் எனவும் அறிவுரை கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை, பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரணை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி திருச்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலசுப்பிரமணியனை பிடித்து ஆடியோ குறித்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில், நேற்று (20.07.2021) மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தனிப்படை போலீசார் மிக ரகசியமான இடத்தில் வைத்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.