பெரியார் பல்கலையில் தொலைதூரக் கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாத நிலையில், தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலையில் உள்ள தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கைக்காக தமி-ழகம் முழுவதும் 110 படிப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. தவிர, பல்கலை இணையதளம் மூலமாகவும் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தொலைநிலைக் கல்வித்திட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது, புத்தக விநியோகம் உள்ளிட்ட விவகாரங்களில் பெரியார் பல்கலை நிர்வாகம் தொடர்ந்து சொதப்பி வருவதாக படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் சேலத்தில் புதன்கிழமையன்று (டிசம்பர் 26, 2018) திடீரென்று கூடி, பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் அரங்கேறி வரும் குளறுபடிகள் குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் பேசினர்.
''கல்வி ஆண்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்திலும், காலண்டர் ஆண்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 2017&2018ம் கல்வி ஆண்டு, காலண்டர் ஆண்டில் சேர்ந்தவர்களுக்கு பல மாதங்கள் தாமதமாகத்தான் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வு எழுதியவர்களில் பலருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டச்சான்றிதழ் வழங்குவதிலும் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன.
தொலைநிலைக் கல்வி மாணவர்களிடம் புத்தகங்களுக்கும் சேர்த்துதான் பெரியார் பல்கலை கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து முன்பு தொலைநிலைக் கல்வி மைய (பிரைடு) இயக்குநரிடம் கேட்டதற்கு, 'பெரியார் பல்கலை ஆன்லைனில் பாடப்புத்தகங்களை பதிவேற்றம் செய்திருக்கிறோம். அதிலிருந்து மாணவர்கள் புத்தகங்களை டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளட்டும்' என்றார்கள்.
ஆனால், இன்றுவரை பல்கலை இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று (டிச. 26) வெளியிடப்பட்டு உள்ளன. இதில் தோல்வி அடைந்தவர்களுக்கு அவகாசமே வழங்காமல் வரும் 2019, ஜனவரி 4ம் தேதி முதல் தேர்வு கால அட்டவணையை பல்கலை வெளியிட்டுள்ளது முரணாக உள்ளது. மாணவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளோம்,'' என்றனர்.
இதையடுத்து, படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பெரியார் பல்கலை துணை வேந்தர் குழந்தைவேலுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், '''புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று இப்போது வந்து சொல்கிறீர்கள்?' என்று துணைவேந்தர் கேட்டார். நாங்கள் சொல்லும் வரை அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாததுபோல் கேட்டார். ஆனாலும் நாங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,'' என்றனர்.