Skip to main content

சாதிச்சுட்டேன்யா.. சாதிச்சுட்டேன்... - தீர்ந்தது ஏக்கம், மகிழ்ச்சியில் பாரிவேந்தர் 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெறும் அளவுக்கு முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக முன்னணியில் இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் (எ) பச்சைமுத்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் இவர், தனக்கு அடுத்த இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவபதியை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல உள்ளார்.

 

parivendhar ijk



புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் தலைவரான பாரிவேந்தர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது சமூகம் சார்ந்த சங்கத்தை இந்திய ஜனநாயக கட்சி என்று உருவாக்கினார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் சொல்லத்தக்க வகையில் வாக்கு வாங்கியது இ.ஜ.க. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவுடன் நன்கு நெருக்கம் காட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் பாஜக ஒரு பெரிய மாநாட்டை வண்டலூரில் நடத்த பின்புலனாக இருந்தார். அந்தத் தேர்தலில் பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை வாங்கினாலும் வெற்றி பெற முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகும் பாஜகவுடன் நட்பாகவே இருந்த பாரிவேந்தர், 2019 தேர்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பாஜகவோ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பாரிவேந்தரை மறந்தது. அவருக்கு சீட் அறிவிக்கப்படவில்லை.

பிறகு, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை சந்தித்துப் பேசினார். புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திமுகவிடமிருந்து அழைப்பு வர, ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆனார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவானது. இப்படி ஒரு கூட்டணி அமைந்ததிலிருந்தே வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையும் அதனால் உற்சாகமும் பெற்றிருந்தார் பாரிவேந்தர். தற்போது அவரது வெற்றி உறுதியாகிக்கொண்டு இருக்கிறது. அதுவும் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் பாரிவேந்தர்.

  stalin parivendhar



தன்னைப் போலவே கல்வித்தந்தைகளாக இருக்கும் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், விஸ்வநாதன் ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாகி டெல்லி சென்று வந்துவிட்டனர். ஆனால், தனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது. இதற்காக எவ்வளவு தாராளமாக இருந்தபோதும் வெற்றி வாய்ப்பு தள்ளிப் போனது. அது இப்போது நிகழ்ந்திருப்பதால் அவரது ஏக்கம் தீர்ந்து தனது கட்சிக்காரர்களிடம் உற்சாகமாகப் பேசி வருகிறாராம். இதிலென்ன விசேஷமென்றால் பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் எதிர்பார்த்தது போல் சீட் கிடைத்திருந்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம்தான். ஆனால், கடைசி நேரத்தில் திமுகவுடன் இணைந்ததால் சீட்டும் கிடைத்து வெற்றியும் கனியும் நிலை இருக்கிறது.          

 

         

சார்ந்த செய்திகள்