Skip to main content

ஓரே இரவில் 8 வீடுகள் கொள்ளை ! 

Published on 11/08/2018 | Edited on 27/08/2018
த்

 

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் குடித்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.  லாரி டிரைவர் இவரின் மகன்கள் கண்ணன் கார்த்தி இவர்களில் கண்ணன் கம்பரசம்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெம்பரவரி வேலை செய்கிறார். 

 

வீடு - 1 

கார்த்தி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணன், கண்ணன் மற்றும் கார்த்தி ஆகிய 3 பேரும் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். வீட்டில் கண்ணன் மனைவி நதியா இவர்களின் குழந்தைகள் இரண்டுபேர் மட்டும் வீட்டில் இருந்தனர். இரவு வீட்டில் துணைக்கு ஆட்கள் இல்லாததால் நதியா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார். அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு நதியா வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது முன்பக்க அறை மற்றும் படுக்கை அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து பிரேஸ்லெட், செயின், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்கு, டம்ளர், ஸ்பூன் உள்ளிட்ட 1கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பதை பார்த்ததும் இவருக்கு இன்னும் பயம் தொற்றிக்கொண்டது. 

இந்த நிலையில் நதியா அவரது கணவர் கண்ணனுக்கு செல்போனில் தகவல் சொல்லி அழைத்திருக்கிறார். அவர் வீட்டை பார்வையிட்டபோது வீட்டு மாடியின் மேல் உள்ள அறைக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் அங்கு உள்ள பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை. இதனையடுத்து கண்ணன் இந்த கொள்ளை குறித்து கொள்ளிடம் போலீசாரிடம் புகார் கொடுத்ததும் சம்பவத்திற்கு எஸ்.ஐ. ஜெயக்குமார் தலைமையில் விசாரித்திருக்கிறார்கள். 


வீடு - 2

அப்போது கண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது வீடு, அதன் அருகில் உள்ள மற்ற 2 வீடுகளின் முன் பக்க கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 


வீடு - 3

நெ.1டோல்கேட் பிச்சாண்டார்கோவில் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சேதுநாராயணன் இவர் முசிறி அருகே உள்ள தா.பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலை எழுந்து வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது வெளிப்பக்கமாக மர்ம நபர்கள் யாரோ? கதவை பூட்டி இருந்ததை அறிந்த அவர் அருகில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டனர். 


வீடு - 4

வெளியே வந்த சேதுநாராயணன் தனது மற்றொரு வீட்டை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மர்ம நபர்களால் சிதறடிக்கப்பட்டு கிடந்தன. இருப்பினும் அங்கு விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. ஆறுமுகம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.

வீடு - 5

இதனைதொடர்ந்து மண்ணச்சநல்லூரை சேர்ந்த முரளி என்பவர், நெ.1 டோல்கேட் அருகில் உள்ள சுப்பிரமணியம் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் மளிகை கடையில் விற்பனை செய்யும் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்களுக்கு பணம், நகை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த காசோலை மற்றும் அட்டைபெட்டிகளை எடுத்து வீட்டு வாசலில் எறிந்துவிட்டு சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த முரளி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். 

வீடு - 6

அந்த வீட்டின் அருகே உள்ள மற்றொரு மாடி வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு அங்கேயும் கொள்ளை முயற்சி நடந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதால் என்னென்ன பொருட்கள் திருட்டு போனது என்ற விவரம் தெரியவில்லை.

திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி நடந்த அனைத்து வீடுகளிலும் மர்ம நபர்கள் கை ரேகைகளை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்களா? அல்லது கும்பலாக வந்து குழுக்களாக பிரிந்து செயல்பட்டார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொள்ளிடம் பகுதியில் ஒரே நாளில் 8 வீடுகளில் கொள்ளை என்பது பொதுமக்களிடம் பெரிய பீதியை ஏற்படுத்துகிறது. 

சார்ந்த செய்திகள்