கரூர் அருகே ஆவணங்கள் வைத்து கடன் வழங்குவதாக கூறி கள்ள ரூபாய் நோட்டுகளை காட்டி பணமோசடியில் ஈடுபட முயன்ற 2 பேர் கைது.
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே மூலிமங்கலம் நாட்டுக்கல் 3-வது வீதியைச் சேர்ந்தவர் வடிவேல் ( 32). இவர் சமூக வலைதளங்களில் லோன் வழங்கப்படும் என்ற பதிவை பார்த்து அந்த நபருக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்பொழுது இவரை கரூர் காந்திகிராமம் 3-வது கிராஸ் இந்திரா நகர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் (34), ராமேஸ்வரம் பட்டி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி, கரூர் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாலகிருஷ்ணன் (21) ஆகியோர் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி செய்து தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வடிவேல் கடன் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தார்.
பின்னர் ஜெயச்சந்திரன் தலைமையிலான 3 பேரும் கரூர்- ஈரோடு செல்லும் சாலையில் உள்ள வேட்டமங்கலம் அருகே ஆசாரி பட்டறை பஸ்நிறுத்தம் அருகில் வரும்படி கூறியுள்ளனர். அப்போது 3 பேரும் காரில் வந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து வடிவேலிடம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். வடிவேல் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஜெயச்சந்திரன் உட்பட 3 பேர் காரில் இருந்த பேக்கை எடுத்து அதில் இருந்த பணத்தை காண்பித்து டாக்குமெண்ட் கட்டணத்தை கேட்டுள்ளனர். பணக்கட்டுகளை பார்த்த வடிவேல் அவர்கள் காட்டிய பண கட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் ஒரிஜினல் ரூ.500 நோட்டும், அடிப்பகுதியில் வெள்ளை தாள் இருந்ததை பார்த்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்று சந்தேகப்பட்டு தான் வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக தெரிவித்து விட்டு வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இதுகுறித்து புகார் செய்திருக்கிறார்.
இதனையடுத்து புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் புன்னம் சத்திரம் பகுதிக்கு சென்றனர். அங்கு அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் ஜெயச்சந்திரன், கார் டிரைவர் பாலகிருஷ்ணன், சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் இருந்தனர். காரை நிறுத்தியதும் சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி தப்பி ஓடி விட்டார். பின்னர் கார் டிரைவர் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டு போல உள்ள வெள்ளைத்தாள்கள், கார், பல்வேறு வங்கிகளின் ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.