திருச்சிராப்பள்ளி மாவட்டம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவில் ‘ஆபரேசன் அகழி’ என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அதன்படி, குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் தயார் செய்து கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி குற்றவாளிகளின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று (07-10-24) ‘ஆபரேசன் அகழி’ 2-வது பெயர் பட்டியல் தயார் செய்து, பால்ராஜ், விமல் (எ) செல்வ குமார், ஸ்டீபன் ராஜ், ராமு, நாகேந்திரன் (எ) பாம்புகுட்டி நாகேந்திரன், நவீன் குமார், ராஜா, பெரியசாமி (எ) கருவாடு பெரியசாமி, ரமேஷ், சன்னாசி (எ) செந்தில், ஆனந்த், காத்தான் (எ) காத்தப்பிள்ளை, கங்கா (எ) திலீப் குமார், விசு (எ) விசுவநாதன், முருகானந்தம் மற்றும் மணிமாறன் ஆகியோர்களின் விபரங்களை சேகரித்து அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
‘ஆபரேசன் அகழி’ 2-வது பட்டியல் சோதனை முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 290 சொத்து ஆவணங்கள், 45 வங்கி கணக்கு புத்தகங்கள், 60 புரோ நோட்டுகள், 22 நிரப்பப்படாத காசோலைகள், 05 செல்போன்கள், 13 சிம்கார்டுகள், உள்ளிட்ட பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட பத்திரங்களும் அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை எனத் தெரிய வந்தது. ‘ஆபரேஷன் அகழி’ நடவடிக்கையால் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நிறைய மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகியுள்ளனர். நாளை (09-10-24) குறை தீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்களின் தகவலின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ‘ஆபரேசன் அகழி’யின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ, நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், உதவி எண். 97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். .