"எங்களுக்கு மாடு.. உங்க ஆளுங்க.. ரெண்டுமே ஒண்ணுதான்" என சாதிய வன்மத்தோடு பட்டியலினத்தைச் சேர்ந்த முதியவரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் குமாி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள எள்ளுவிளையைச் சோ்ந்தவா் சந்திரன். 73 வயதான இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சொந்தமாக ஆடு, மாடுகளையும் வளர்த்து வரும் சந்திரன், அதனை அருகில் உள்ள தென்னை மரத் தோப்புகளில் மேய்த்து வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதியன்று, சந்திரன் தனது பசு மாட்டை குளிப்பாட்டிவிட்டு அங்குள்ள தென்னை மரத்தில் கட்டிப்போட்டுள்ளார்.
அப்போது, சிறிது நேரத்தில் அந்த கயிறு அவிழ்ந்து விழவே, நடுவதற்காக வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்றுகளின் ஓலைகளை சந்திரனின் மாடு கடித்துள்ளது. இதைப் பார்த்த அந்த தோப்பின் காவலாளி கிருஷ்ணசாமி என்பவர், அந்த மாட்டை அங்கேயே கட்டிப்போட்டு தென்னை மட்டையால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். உடனே சத்தம் கேட்டு ஓடிய சந்திரன், என்னோட மாட்ட அடிக்காதிங்க என காவலாளியின் காலில் விழுந்து கதறியுள்ளார்.
அதன் பிறகு, அடுத்த நாள் பூமி பாதுகாப்பு சங்கச் செயலாளா் ஹாி கோபால் என்பவர், சந்திரனை ஈத்தாமொழி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அங்கு தனியாகச் சென்ற சந்திரனை எடுத்தவுடன் சாதிப்பெயரைச் சொல்லி திட்டிய ஹாி கோபால், அவரது கன்னத்தில் பளார் பளார் என அடித்துள்ளார். அதன் பிறகு, காவலாளிகள் கிருஷ்ணசாமியும் தங்கராஜீம் சேர்ந்துகொண்டு சந்திரனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, தென்னங்கன்றுகளை மாடு கடித்ததற்காக சந்திரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், அந்த பணத்தை வாங்கிய பிறகும் கூட சந்திரனை அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரம், சந்திரன் சொல்லும் விஷயங்களை ஹரிகோபால் மறுத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து விசிகவினர் சந்திரனுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.