கடந்த ஏப்ரல் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்னே தனது குழந்தைக்காக ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் போராட்டம் நடத்திய நிலையில், மீண்டும் டிஜிபி அலுவலகத்தின் முன்பு இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.
சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனது 10 வயது மகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் தவறான சிகிச்சை காரணமாக மகளின் கால் பாதிக்கப்பட்டதாக ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகம் முன்பு ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கோதண்டபாணி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்டார். தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் தனக்கு மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் தனக்கு வேண்டுமே தவிர மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை எனக் கூறி காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு இன்று மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.