செங்கல்பட்டு, மரக்காணம் விஷச்சாராய சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் சாராய அழிப்பு பணியை போலிசார் தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காக்குறிச்சி கிராமத்தில் பலர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை அறிந்து நேற்று மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உத்தரவில் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது.
அதே போல இன்று ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி குழுவினர் மற்றும் வடகாடு போலிசார், ஆலங்குடி மதுவிலக்கு போலிசார் கொண்ட தனிப்படை போலிசார் கரு தெற்கு தெருவில் ஒரு தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பேரல்களை தோண்டி எடுத்து 1100 லிட்டர் சாராய ஊறல்களை அழித்து பேரல்களை அதே இடத்தில் தீயிட்டு எரித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் செயலில் ஈடுபட்ட சிலரை போலிசார் கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக் சரக்கு தடையின்றி கிடைத்தாலும் கூட கருக்காகுறிச்சி பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையும் தடையின்றி நடந்து வருவது வேதனை அளிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஒரு லிட்டர் சாராயம் ரூ.500க்கு விற்பனை செய்வதாக கூறும் சிலர் பணத்தை கூகுள்-பே போன்ற ஆன்லைன் பண பரிமாற்றம் மூலம் பெற்றுக் கொள்வதாகக் கூறுகின்றனர்.