சாத்தான்குளத்தில் தந்தை மகன் மீது பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் எஸ்.ஐ.க்கள், மற்றும் போலீசார் நடத்திய கூட்டு வெறித் தாக்குதலால் மரண வேதனையில் கொடிய சித்ரவதையை அனுபவித்தவர்கள் சில நாட்களில் அடுத்தடுத்து பலியானார்கள். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறாத நிலையில் அடுத்து தென்காசி மாவட்டத்தின் வி.கே. புதூர் எஸ்.ஐ. நடத்திய மூர்க்கத்தனமானத் தாக்குதலால் பலியான ஆட்டோ டிரைவர் குமரேசன் பற்றியது வெளிவந்தது ஏற்கனவே கொதிப்பிலிருந்த தமிழகத்தை மேலும் கொந்தளிப்பாக்கியது.
எஸ்.ஐ. சந்திரசேகரும் காவலர் குமாரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதால் குமரேசனின் உடலில் பலமான உள்காயம் ஏற்பட்ட நிலையில் துடித்த குமரேசன் தனியார் மருத்துவமனையிலும், பின் பாளை அரசு மருத்துவமனையில் மே.13இல் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தது வரையிலான நடந்த செய்தியை ஏற்கனவே 'நக்கீரன்' இணையத்தளம் வெளியிட்டிருந்தது.
போலீஸ் தாக்குதல் காரணமாக மரணமடைந்த குமரேசன் சாவுக்குக் காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று பொதுமக்களும் குமரேசனின் தந்தை நவநீத கிருஷ்ணன் உறவினர்கள் போராட்டம் நடத்திவந்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் டி.எஸ்.பி. மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையின் படி, சம்பந்தப்பட்ட போலிசார் மீது விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை உண்டு என்று உறுதியளித்தனர். அவர்கள் மீது நம்பிக்கை வைத்த உறவினர்கள் உடலைப் பெற்றனர். வி.கே.புதூரில் பாதுகாப்புடன் ஆட்டோ டிரைவர் குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே செந்தில் என்பவர் குமரேசன் மீதுகொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் 270ஆவது பிரிவின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது குமரேசனின் மரணத்திற்குக் காரணம். போலீசாரின் தாக்குதல் என்ற புகார் கிளம்பியதையடுத்து 174ஆவது பிரிவின் படி சந்தேக மரணம், சம்பவிக்கக் காரணமானவர்கள் எஸ்.ஐ.சந்திரசேகர், மற்றும் காவலர் குமார் என இருவர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது.
உடலடக்கம் முடிந்து ஒருவிதமான அமைதி தென்பட்டாலும், வீ.கே.புதூரில் பதற்றம் தணியாத நிலை.
நாம் இது குறித்து மாவட்ட எஸ்.பி.யான சுகுணாசிங்கிடம் பேசியதில் சந்தேக மரணம் என்று தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடக்கும். தவிர போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகு அதில் சொல்லப்பட்டுள்ள காயத்தின் தன்மை. மற்றும் அறிவிக்கைபடி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். நிச்சயம், கண்டிப்பாக நடவடிக்கை உண்டு என்றார்.
சாத்தான்குளம், வி.கே.புதூர் கொடூரச்சம்பவங்களின் நகர்வுகள் தமிழகத்தால் உற்றுக் கவனிக்கப்படுகிறது.