சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அதிரடியாக அரசு கையகப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போலீசைக்கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்கி வருகிறது அரசு.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் நயம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் எட்டு வழிச்சாலைக்கு அளவு கல் நடுவதற்கு பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை மிரட்டினர். இதனால் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்த சன் நியூஸ் கேமராமேன் வேலுவை, டி.எஸ்.பி. சின்னராஜ் கீழே தள்ளினார். சன் நியூஸ் செய்தியாளர் செல்வகுமார் இதை எதிர்த்து போலீசாரை தட்டிக்கேட்டார். அப்போது போலீசார் ஒருமையில் திட்டியதால் ஒருமையில் திட்டாதீர்கள் என்று வாதிட்டார்.
எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து சன் நியூஸ் ஒளிபரப்பி வருவதால் ஆத்திரம் கொண்ட அரசுவின் உத்தரவினால் போலீசார் இப்படி தாக்கியதாக கூறப்படுகிறது.