விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பார்த்திபன். இவர் சென்னை பட்டாபிராம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஹவில்தாராக பணி செய்துவருகிறார். இவரின் தாயார் லட்சுமிகாந்தம் வயது 82. இவர் மட்டும் தனியாக விக்கிரவாண்டியில் வசித்துவருகிறார். அவ்வப்போது தாயாருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை சென்னையில் வாங்கும் ராணுவ வீரர் பார்த்திபன், அதைக் கூரியரில் அனுப்பி வைப்பது வழக்கம்.
கடந்த சில தினங்களாக கூரியர் சர்வீஸ் சரிவர வாடிக்கையாளர்களிடம் தபால்களை, பார்சல்களைக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பார்த்திபன் அனுப்பிய மருந்து பார்சல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கூரியர் அலுவலகத்திற்கு வந்து தங்கிவிட்டது. இதுகுறித்து கூரியர் அலுவலகம் மூலம் விசாரித்து விபரமறிந்த பார்த்திபன் எப்படியும் தனது தாய்க்கு அந்த மருந்து கிடைக்க வேண்டும் என்ற தாய்ப் பாசத்தின் காரணமாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தை தொடர்புகொண்டுள்ளார். அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பரணிநாதன் அவர்களிடம் தனது தாயாருக்கு சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட மருந்து பார்சல் விழுப்புரம் கூரியர் அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பது குறித்தும், அதை அங்கிருந்து பெற்று தனது தாயாரிடம் சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார்.
சப் - இன்ஸ்பெக்டர் பரணிநாதன் உடனடியாக விழுப்புரத்தில் உள்ள கூரியர் அலுவலகம் சென்று, பார்த்திபன் அனுப்பிய மருந்து பார்சலைப் பெற்றுக்கொண்டார். அதை உடனடியாக விக்கிரவாண்டி சென்று பார்த்திபன் தாயார் லட்சுமிகாந்தம் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த தகவலை ராணுவ வீரர் பார்த்திபனுக்கும் தெரிவித்தார். இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த ராணுவ வீரர் பார்த்திபன், கரோனா நோய் பரவல் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான பணிகளுக்கு இடையேயும் தனது தாயாருக்குச் சேர வேண்டிய மருந்து பார்சலைக் கொண்டு வந்து கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதனின் மனிதாபிமான சேவைக்கு நன்றி தெரிவித்தார்.