
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் மது போதையில் இளைஞர்கள் சிலர் இரண்டடி நீளம் கொண்ட பட்டாக்கத்தியை தரையில் தேய்த்து பொறி பறக்க, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினரைக் கண்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பித்துச் சென்றனர். அவர்களைத் துரத்திச் சென்ற விருத்தாச்சலம் காவல்துறையினர், இளைஞர்கள் தப்பிப்பதற்குள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் விருத்தாச்சலம் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார்(20), மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (22) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் பட்டாகத்தி கொண்டு பொது இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள் இருவரும் தலை முடியை பல விதமான ஸ்டைலில் வைத்திருந்ததால், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் முடி திருத்துபவரை வரவழைத்து முற்றிலுமாக தலையில் இருந்த முடியை வெட்டி எடுத்தனர். பின்னர் அவர்களைக் குளிப்பாட்டி நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
மது போதையில் பட்டாகத்தி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்களைப் பிடித்து முடி வெட்டி, குளிப்பாட்டி காவல்துறையினர் சிறைக்கு அனுப்பியது வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.