இடைப்பாடி அருகே, கனிமக் கற்களை வெட்டிக்கடத்த முயற்சி செய்த நபர்களை தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ.க்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் சமுத்திரத்தில், மூலக்கடை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி சிலர் கற்களை வெட்டி டிராக்டர் வாகனத்தில் கடத்திச் செல்வதாக இடைப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில், வி.ஏ.ஓ.க்கள் குமார், சுரேஷ் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். கற்களை வெட்டிக் கொண்டிருந்த ஆள்களை எச்சரித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கற்களை வெட்டிக் கொண்டிருந்த ஆட்கள் திடீரென்று, வி.ஏ.ஓ.க்கள் இருவரையும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி பொதுமக்கள் நிகழ்விடத்தில் குவிந்தனர். மக்கள் திரண்டு வருவதைப் பார்த்ததும், வி.ஏ.ஓ.க்களைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த வி.ஏ.ஓ.க்களை பொதுமக்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை விசாரணையில், புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (39), மணிகண்டன் (32) ஆகியோர்தான் வி.ஏ.ஓ.க்களை தாக்கினர் என்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பிடிபட்ட இருவர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல், ஆபாச வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய செந்தில் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.