இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு போன்றவற்றை கண்டித்து நாடு முழுவதும் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய தலைநகரம் டெல்லியில் 70 நாட்களை தொடர்ந்து அமைதி வழியில் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்திவந்தனர். அதே வழியில் நாடு முழுவதும் ஷாகின் பாஃக் என்கிற பெயரில் மக்கள் இரவு – பகல் என 24 மணி நேரமும் போராட்டம் நடத்த துவங்கினர். தமிழகத்தில் சென்னை, கோவை, வாணியம்பாடி என சில இடங்களில் போராட்டங்கள் தொடங்கி நடந்துவருகின்றன.
இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆதரவாளர்கள், காவல்துறை உதவியோடு இந்த ஜனநாயக போராட்டத்தில் ஊடுருவி அவர்களை தாக்கி அதனை வன்முறையாக மாற்றினர். இந்த மோதலில் இதுவரை 38 பேருக்கும் மேல் பலியானதாக தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் ஷாகின் பாஃக் போராட்டங்களை கலைக்கவும், புதியதாக ஷாகீன் பாஃக் தொடங்காமல் இருக்க காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது.
அதன்படி வாணியம்பாடி நகரத்தில் நடைபெறும் ஷாகீன் பாஃக் போராட்டம் தொடர்ச்சியாக பிப்ரவரி 27ந்தேதியோடு 8வது நாளாக நடைபெற்றுவருகிறது. எதிர்கட்சிகளின் பல இரண்டம் கட்ட தலைவர்கள் வந்து இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களது ஆதரவை வழங்கிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி 26ந்தேதி இரவு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து ஆம்பூர் ஷாகின் பாஃக் என்கிற தொடர் போராட்டம் என்று அறிவித்து பந்தலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேலிட உத்தரவுப்படி ஆம்பூர் போலீஸார் கலைந்து செல்லவேண்டும் எனக்கூறினர். அவர்கள் மறுத்தனர், அனுமதி பெறாத போராட்டம் எனக்கூறி 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் போலீஸார்.
இரவெல்லாம் போராட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 27ந்தேதி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரை ஆம்பூர் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இது ஆம்பூர் இஸ்லாமிய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.