விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகில் உள்ள ஆத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன்(55). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நிலத்தில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்றுள்ளார். நிலத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் போது, இரவு பத்து மணி அளவில் அப்பகுதியில் ஓரமாகப் படுத்துத் தூங்கி இருக்கிறார் ஜெயராமன்.
அப்போது இயங்குனத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பிளாஸ்டிக் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார். ஜெயராமன் படுத்திருந்த பகுதியில் ஒரு பூனை நின்று கொண்டிருந்தது. அதை முயல் என்று நினைத்து, பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூனை இறந்தது. அதோடு அருகே இருந்த ஜெயராமனின் முகம் மற்றும் கை ஆகிய பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கூடி வந்து அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.