
சேலம் அருகே 17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக அதிமுக பிரமுகரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் ஏரிக்கரையைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் வசந்தகுமார் (வயது 30), அதிமுகவில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 2வது வார்டு செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.
இவர், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி, நெருக்கமாக பழகிவந்துள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ள சிறுமி, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துவந்தார்.
வசந்தகுமார் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டிவந்தார். சிறுமி எங்கேயாவது செல்ல வேண்டுமானால், அவர் தனது வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஊர்க்காரர்கள் மட்டுமின்றி, இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நெருங்கிப் பழகியதை யாரும் தவறாக கருதவில்லை.
இதையெல்லாம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வசந்தகுமார், சிறுமியைத் தனது ஆசைக்கு இணங்கவைத்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.
சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் வசந்தகுமார், சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக இருப்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சரக்கு வாகனத்திலேயே சிறுமியைப் பலமுறை வன்கொடுமை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.