விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் காவல் நிலையம் உள்ளது. தீபாவளியன்று இந்த காவல் நிலையம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து பேர் கொண்ட கும்பல் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்து இதைக் கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான், காவல் நிலையத்திலிருந்து எழுந்து சென்று போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்க வேண்டும். இதுபோன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறி அந்தக் கும்பலைக் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்ட சந்தோஷத்தில் இருந்த அந்தக் கும்பல் சப் இன்ஸ்பெக்டர் மீது கையில் வைத்திருந்த பட்டாசைக் கொளுத்தி வீசியுள்ளனர். தன் மீது பட்டாசு வெடித்துச் சிதற விடாமல் சுதாரித்துக்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான், பட்டாசு கொளுத்திப் போட்ட 5 நபர்களைப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜானை கடுமையாக தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்யடைந்த பயிற்சி எஸ்.ஐ. நமச்சிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவதி உள்ளிட்ட போலீசார் அந்த நால்வரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார், பிடிபட்ட நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அரகண்ட நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19 வயது ஆகாஷ், 27 வயது விக்னேஷ், 35 வயது சோமு மற்றும் ஷாநவாஸ், ஹரிதரன் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் ஹரிதரன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பிடிபட்ட 4 பேர் மீதும் கொலை முயற்சி உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஹரிஹதரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது 5 பேர் கொண்ட கும்பல் பட்டாசு கொளுத்திப் போட்டு கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.