ஆத்தூர் அருகே, கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், மும்முடி பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரும் கடந்த நான்கு நாள்களில் அடுத்தடுத்து கடத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தனிப்படையினர் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜூன் 19ம் தேதி மதியம் மல்லியக்கரை அருகே உள்ள கருத்த ராஜபாளையத்தில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரை மக்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, மல்லியக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரிய வந்தது. மல்லியக்கரையில் ஆட்டோ மீது அருண்குமாரின் கார் மோதி உள்ளது. அதனால்தான் அந்தப்பகுதி மக்கள் காரை துரத்தி வந்தது தெரிய வந்தது.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு, கள்ளநோட்டு கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரதீப் (42) என்பவன்தான் கள்ளநோட்டு கும்பலுக்கு தலைவனாக செயல்படுவதும், அவன் தற்போது கரூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அருண்குமாரை காவல்துறையினர் பிரதீப்பிடம் செல்போனில் பேச வைத்தனர். அருண்குமார் அழைத்ததன் பேரில், பிரதீப் மற்றும் அவனுடைய கூட்டாளிகளான திருச்சி சதீஸ்குமார் (30), சின்னசேலம் மேனகா (28) ஆகியோர் மல்லியக்கரைக்கு வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 6.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ''கள்ளநோட்டு கும்பல் தலைவன் பிரதீப், சேலத்தில் தங்கி ஆரம்பத்தில் சின்னச்சின்ன அளவில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்துள்ளான். இதில் மயங்கும் ஆள்களிடம் பெரிய அளவில் நல்ல ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக இரு மடங்கு கள்ளப்பணத்தை கைமாற்றி வந்துள்ளான். இந்த கும்பலுக்கு இன்னும் யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர்.