சென்னை தாம்பரம் அருகே முகேஷ் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முகேஷ் காயமடைந்த நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த முகேஷ் தாம்பரம் அடுத்த வேடமங்கலத்தில் உள்ள தனது நண்பர் விஜய் வீட்டிற்கு, சக நண்பர் உதயாவுடன் சென்றுள்ளார். தற்போது சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த வீட்டில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மற்ற இரு மாணவர்களும் தப்பி சென்று விட்டனர்.
மாணவனை மீட்ட பொதுமக்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாணவர்கள் இருவரை தேடி வருகின்றன. அதேபோல் முகேஷின் நண்பர் விஜயின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.