சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. மறுபிறவி குறித்துப் பேசுவது; ஆன்மீகம் குறித்துப் பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித் துறையினுடைய உயரதிகாரிகளுக்குச் சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.
இதனையடுத்து அசோக் நகர் பள்ளிக்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்திருந்தார். அப்போது அவர், ''இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்' எனத் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்ததையும், சனாதன, ஆபாச கருத்துக்களைப் பேசி மூடநம்பிக்கைகளை விதைப்பதோடு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு கண்டன போராட்டம் நடத்தினர் மேலும் அசோக் நகர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரிக்க மகாவிஷ்ணுவை விசாரிக்க சைதாப்பேட்டை போலீசார் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் திருப்பூரில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகத்திலும், அவரது சொந்த ஊரான மதுரையில் மகாவிஷ்ணு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால் மகாவிஷ்ணுவைத் தொடர்பு கொள்ள இயலாததால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மகாவிஷ்ணுவைக் கைது செய்வது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். எனவே விரைவில் அவர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.