Skip to main content

கொள்ளை அடித்த பணத்தில் ஆடம்பர பங்களா; பலே திருடன் கைது!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019


பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளை அடித்த பணத்தில், பெங்களூரில் உள்ள இரண்டாவது மனைவிக்கு ஆடம்பர பங்களா கட்டிக்கொடுத்த பலே திருடனை போலீசார் கைது செய்தனர்.

 

m


சேலம் சூரமங்கலம் முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளை நடந்து வந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஒரே கும்பல்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை யூகித்தனர். இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க சூரமங்கலம் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதேநேரம் பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை நடந்து வந்தது.


இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 25, 2019) முல்லை நகரில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் தொளசம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பதும், சேலத்தில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வ ந்தது.


முல்லை நகர், காசக்காரனூர், நரசோதிப்பட்டி ஆகிய இடங்களில் பூட்டியிருந்த 6 வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்திருப்பதை ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை அடகு வைத்து பணமாக்கி இருக்கிறார். 


அவர் எந்தெந்த கடைகளில் திருடிய நகைகளை அடகு வைத்தார் என்பதையும் அடையாளம் காட்டினார். மாரியப்பன் அடகு வைத்திருந்த, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 40 பவுன் திருட்டு நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 


மாரியப்பனிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு தொளசம்பட்டியில் ஒரு மனைவியும், பெங்களூரில் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதும் தெரிய வந்தது.


கொள்ளை அடித்த நகைகள், பணத்தைக் கொண்டு அவர் பெங்களூர் மனைவிக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். முதல் மனைவியிடம், பெங்களூரில் கட்டட வேலை க்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்று இரண்டாவது மனைவியுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.


பெங்களூரில் இருந்து சேலத்திற்கு ரயிலில் வரும் மாரியப்பன், ஜங்ஷன் பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்று நோட்டம் விட்டு வந்துள்ளார். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறி வைத்து ஸ்க்ரூ டிரைவர், சிறு கடப்பாரை மூலம் பூட்டை உடைத்து திருடி வந்துள்ளார். பெரும்பாலும் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு 5 மணியளவில் ரயிலில் ஏறி, மீண்டும் பெங்களூருக்குச் சென்றுவிடுவதை வாடிக்கையாக இருந்துள்ளார். 


கைதான மாரியப்பனை, போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்