Skip to main content

5 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 பேருக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை - நீதிமன்றம் அதிரடி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

special court awarded life imprisonment 7 men who 5 child case

 

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்து பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்தார். இதற்காக தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் வறுமையின் பிடியில் கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து சிறுமிகள் உள்பட பலரை கொத்தடிமையாக அழைத்து வந்து இதுபோன்ற வேலைகளில் கன்னியப்பன் ஈடுபடுத்தி வந்துள்ளார். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுமிகளும் அடங்குவார்கள். 

 

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக சிறுமிகளை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கிடைத்த தகவலையடுத்து புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் வில்லியனூர் அருகேயுள்ள கோர்க்காட்டில் வீட்டில் அடைத்து வைத்து பண்ணை தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

 

இதையடுத்து குழந்தைகள் நலக் காப்பக நிர்வாகிகள் வில்லியனூரை அடுத்த கோர்க்காட்டுக்கு சென்று சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் அந்த சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசாரின் உதவியுடன் சென்று அந்த சிறுமிகளை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ. 3 ஆயிரத்தை பெற்றோரிடம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக வாத்து மேய்க்க வைத்து இருந்ததாகவும், பண்ணையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  தெரிவித்தனர். மேலும் பண்ணையில் உள்ள அறையில் அந்த சிறுமிகளுக்கு கன்னியப்பன் உள்பட பலர் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களை கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் சிறுமிகளை கட்டி வைத்து சிறுவர்கள் உள்பட பலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. 

 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு  ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் 5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் அடையாளம் காட்டியதன்படி கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப் பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் (53), அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23) மற்றும் ஒரு சிறார் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் நிர்பயா திட்டத்திலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

 

இந்த வழக்கில் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் சிறார் ஒருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். ஐந்து சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்