நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். நாளை பிற்பகல் 03.55 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் மாலை 05.10 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கு அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்க இருக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெற இருக்கும் பெரியமேடு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வருகிறார். பயணத்தின் இடையில் பா.ஜ.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 05.45 மணிக்கு வரும் பிரதமர், இரவு 07.00 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் அங்கிருந்து இரவு 07.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 07.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடைகிறார். பின்னர், அங்கிருந்து இரவு 07.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகை காரணமாக ட்ரோன் உள்ளிட்ட வான்வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 22,000 போலீசாரை கொண்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.