Skip to main content

‘வேகமெடுக்கும் கொரோனா; உரிய நடவடிக்கை தேவை’ - பாமக நிறுவனர் ராமதாஸ்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

pmk ramadoss tweet about corona virus

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, ‘சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 பேர் உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.

 

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குச்  சோதனை நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

 

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்