Skip to main content

பாமக பிரமுகர் வெட்டிக் கொலை; போலீசார் தீவிர விசாரணை 

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

pmk member hacked to passed away

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ளது கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் 45 வயது ஆதித்யன். இவர் பாமக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். இவரது உறவினர் லட்சுமி நாராயணன். இவர்கள் இருவருக்கும் இடையில் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆதித்யன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு, தனது ஊரான கப்பியாம்புலியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மண்டபம் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கும் வாதநாரயணன் வாய்க்கால் பகுதிக்கும் இடையே சில மர்ம நபர்கள் ஆதித்யனை வழி மறித்துள்ளனர்.  அவரும் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் ஆதித்யனை சரமாரியாக கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இந்தச் சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தெரிவிக்க, இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ஆதித்யன் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரடி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆதித்யன் மனைவி சாந்தி அளித்த புகாரில் அவர்களது உறவினர்களான கப்பியாம்புலியூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ராமு ,விஷ்ணு, நாராயணமூர்த்தி, ஆகியோர் காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து, அந்த நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாமக பிரமுகர் கொலை சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஏகப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் இரண்டு மணி அளவில் ஆதித்யன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்