Skip to main content

"தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்கு முயலக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் 

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

pmk chief anbumani ramadoss talks about thenpennaiyaru river issue  

 

தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையிலான தென்பெண்ணை ஆற்று நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மார்ச் 14-ஆம் நாளுக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு அம்மாநிலத்தில் 112 கி.மீ மட்டுமே பாய்கிறது. அதை விட 50% அதிகமாக 180 கி.மீ தொலைவுக்கு தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

 

தென்பெண்ணையாற்றின் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்நாடகம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தென்பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு காண 3 மாதங்களில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று திசம்பர் 14-ஆம் நாள் ஆணையிட்டது. அதன்படி நேற்றைக்குள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் கடமையை இதுவரை நிறைவேற்றவில்லை. தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அதை செயல்படுத்தும் படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. நடுவர் மன்றம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு முன்பாக கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு, நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்கவில்லை.

 

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைப்பு ஆகும். அந்த இலக்கணத்தின்படி மத்திய அரசு செயல்படுகிறது என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடுவர் மன்றத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு மத்திய அரசு செயல்படாததற்கு காரணம் அரசியல் தான். கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 24-ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்கான  தேர்தல் அட்டவணை எந்த நேரமும் வெளியிடப்படக்கூடும். இத்தகைய நேரத்தில் தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைத்தால் அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான் நடுவர் மன்றம் அமைப்பதை மத்திய அரசு தாமதமாக்குகிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும், காவிரி ஆற்று நீர் சிக்கலில் எவ்வாறு தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டனவோ அதேபோல் தான் தென்பெண்ணையாற்று சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு சட்டத்தை மீறி அணை கட்ட மத்திய அரசு தான் உதவியது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல், தென்பெண்ணையாற்று சிக்கலிலும் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைப்பதற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் தான் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி சிக்கலைப் போலவே தென்பெண்ணையாறு சிக்கலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் ஏற்பாட்டில் இரு மாநிலங்களுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன. அதனால் நடுவர் மன்றம் அமைப்பது மட்டும் தான் பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு ஆகும். அதை உணர்ந்து தான் உச்சநீதிமன்றமும் அத்தகைய தீர்ப்பை அளித்தது. அதை நிறைவேற்றுவதும், உழவர்கள் நலனைக் காப்பதும் தான் மத்திய அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்கு முயலக்கூடாது.

 

எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அவ்வாறு அடுத்த சில நாட்களுக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு தவறினால், மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்