நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரும், தமிழகத்தின் மூத்தபத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் தபெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நக்கீரன்” இதழாசிரியர் திரு. கோபால் அவர்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் காவல்துறையில் குற்ற மனு கொடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 124 A -இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை சென்னை மாநகர்க் காவல்துறை தளைப்படுத்திய அடாத செயல் போல் இதற்கு முன் எந்த ஆளுநரும் இந்தியாவில் செய்ததில்லை என்று பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநரின் அடாத செயலையும், அதைத் தலைமேல் கொண்டு களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதழியல் துறையின் உரிமைப் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையைத் தடுத்திட உடனடியாகக் களத்தில் இறங்கி எழும்பூர் நீதிமன்றத்தில் வாதாடிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் திரு. என். இராம் அவர்களின் சனநாயகக் காப்பு நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.
இந்து, ஆனந்த விகடன், தினமலர், தினகரன், டெக்கான் க்ரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடுகள் மற்றும் புதிய தலைமுறை, நியூஸ்18 தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கண்டனக் கூட்டறிக்கை வெளியிட்டதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவிகளைத் தவறான திசைக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாக “நக்கீரன்” இதழ், கடந்த ஏப்ரல் மாதம் படங்களுடன் கட்டுரை வெளியிட்டது என்பதுதான் அரசுத் தரப்பில் கூறியுள்ள குற்றச்சாட்டு! இதற்குத்தான் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 124-இன் கீழ் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்திருக்கிறார்கள்.
பிரித்தானியக் காலனி ஆட்சிக் காலத்தில், 1870ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1898இல் திருத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 மற்றும் 124ஆ பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 124 என்பது பிரித்தானியப் பேரரசி (ணன்ங்ங்ய்) மற்றும் பிரித்தானியாவின் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகியோரின் அதிகாரம் செயல்பட முடியாமல் தடுப்பவர்கள் மற்றும் அவர்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட தண்டனைப் பிரிவு. விடுதலை பெற்ற இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு இப்பிரிவில் உள்ள “பேரரசி” என்பதைக் குடியரசுத் தலைவர் என்றும், கவர்னர் ஜெனரல் என்பதை மாநில ஆளுநர் என்றும் திருத்திக் கொண்டார்கள்.
திருத்தப்பட்டாலும் இந்த 124இன்கீழ் யார் மீதும் இந்தியாவில் வழக்குப் போட்டதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை “பெரிய ஆராய்ச்சி” செய்து இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் போட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு மாநில அரசின் அன்றாட நிர்வாக வேலைகளில் தலையிட்டு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவது நாடறிந்த செய்தி. இப்போது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றிலும் குறுக்கே புகுந்து பொருந்தாத பிரிவுகளின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முனைத்திருப்பது, மக்களின் சனநாயக உரிமையைப் பறிப்பதில் அவர் இறங்குவதன் முன்னோட்டமாகும்.
பொதுவாக ஊடகங்களின் மீது வழக்குப் பதிவு செய்யும்போது அதன் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் அல்லது செய்தியாளர்கள் மீது வழக்குப்பதியப்படும். ஆனால், நக்கீரன் மீதான வழக்கில் அவ்வேடு முழுமையாக வெளிவரக் கூடாது என்ற கெடு நோக்கத்தில், அவ்வேட்டின் ஆசிரியர் தொடங்கி, துணை ஆசிரியர், செய்தியாளர்கள், உற்பத்தி மேலாளர்கள், விநியோகிஸ்தர்கள் வரை சற்றொப்ப 35 பேரின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது! தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை முழுமையாகக் கைவிட வேண்டும்.
காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் போட்ட தண்டனைச் சட்டப்பிரிவுகள் 124, 124ஆ போன்றவற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக நீதித்துறையினரும் சட்ட வல்லுநர்களும் எழுப்பி வந்திருக்கிறார்கள். (அரசை விமர்சித்தாலே 124ஆ - இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்).
எனவே, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து பிரிவுகள் 124, 124ஆ இரண்டையும் நீக்குமாறு சனநாயக ஆற்றல்கள் இப்போது வலியுறுத்த வேண்டும்.
நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் இந்து என் இராம் ஆகியோரின் தர்க்கங்களைச் செவிமடுத்து, இவ்வழக்கில் 124 பிரிவு பொருந்தாது என்று கூறியதுடன் கோபால் அவர்களைச் சொந்தப் பிணையில் விடுதலை செய்த, எழும்பூர் 13ஆம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்களின் நீதிசார் நடவடிக்கை பாராட்டிற்குரியது என கூறியுள்ளார்.