கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் குழுவின் கண்காணிப்பாளராக இருப்பவர் ராஜா(37). இவர் தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களுக்கும் சென்று கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். சமீபத்தில் கரும்பு வெட்டும் பணி முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊரில் உள்ள முனியப்பன் கோவிலில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட விழாவில் 100க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கறி விருந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சில மணி நேரங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், அவர்களை உடனடியாக மீட்டு திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கறி விருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டத்தை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். தொழிலாளர்கள் சாப்பிட்ட கோழிக்கறி காரணமா அல்லது அருகில் பழைய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சமைத்தது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தியதோடு, கறி விருந்துக்குப் பயன்பட்ட உணவையும் கிணற்றுத் தண்ணீரையும் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணலூர்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.