Skip to main content

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்