ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பாஜகவின் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். 22 ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையைப் பூட்டி சென்றார். அப்போது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பர்னிச்சர் கடையில் ஜன்னல் வழியாக கடைக்குள் இரண்டு பாக்கெட்டுகளில் பெட்ரோல், டீசல் போட்டு ஒரு குச்சியில் துணி சுற்றி தீ வைத்துள்ளனர். இதில் ஜன்னல் மற்றும் கடையின் உள்ளே இருந்த ஒரு டேபிள் சிறிய அளவில் எரிந்து அணைந்து விட்டது.
23 ந் தேதி காலை தட்சிணாமூர்த்தி அவரது கடையை திறந்தார் அப்போது கடைக்குள் பெட்ரோல், டீசல் சிதறி கிடப்பதும் ஜன்னல் மற்றும் டேபிள் எரிந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பர்னிச்சர் கடையில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதைப்பற்றி தகவல் தெரியவந்ததும் கடையின் அருகே பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
மர்ம நபர்கள் இச்செயலை செய்தார்களா? அல்லது வன்முறை ஏற்படுத்த, பீதியைக் கிளப்ப, பா.ஜ.க. அல்லது இந்து முன்னணியினரே இச்சதிச் செயலை செய்து அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்க முனைந்துள்ளார்களா? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.