Skip to main content

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவர் சுட்டுப்பிடிப்பு

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Petrol attack on police station; One shot

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் சுமார் 12.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசி சென்றனர். காவல் நிலையத்தில் இரும்பு கேட் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய கண்ணாடி பாட்டிலால் ஆன பெட்ரோல் குண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் சுட்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பழைய குற்றவாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபர்கள் என பலரை போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்த பொழுது அங்கிருந்த ஹரி என்ற நபர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பதிலுக்கு போலீசார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்