பாஜகவைச்சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசை ஒரு பிரிவினருக்கு எதிராக செயல்படுவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கே.கே.நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி என்ற தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிக்குப் பாலியல் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது ஆகியவை தொடர்பாக புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தில், ஒரு பிரிவினருக்கு எதிராக தற்போது தமிழ்நாட்டில் பொறுப்பேற்றிருக்கும் அரசு செயல்படுவதாக பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.