மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி முன்னாள் முதல்வர்கள் வேடம் அணிந்து மனுக் கொடுத்த நடனக் கலைஞர்கள்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நல சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் வேடமணிந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானின் அறிவிப்பின்படி ஜோலார்பேட்டை, கந்திலி, குரிசிலாப்பட்டு, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என மாவட்ட காவல் நிர்வாகம் தடை செய்துள்ளது.
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரம் இந்த நடனத்தை நம்பியே உள்ளது. தற்போது, இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்களின் நிலையை விளக்க காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என்ற போது, அவர் நேரம் ஒதுக்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் வருகின்ற 18ஆம் தேதி வியாழக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சட்ட விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறநிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த திட்டமிட்டுள்ளோம். ஆகையால் உண்ணவிரத அறப்போராட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.