சிதம்பரம் பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, மோசமான நிலைக்குச் சென்றது. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பசி மற்றும் கடன் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் நடந்தது. தமிழக அரசு வழங்கிய ரூ. 2,000 நிவாரணம் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இதில் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.
அந்தப் பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில், மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்ற அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரத்திற்கு சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டுகிறோம். கரோனா தொற்றின் வீரியத்தை நன்கு அறிவோம். நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை சிறப்பாக கடைபிடித்து, நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்போடு பணி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். நேரக் கட்டுப்பாடுகள் விதித்து, கடைகளைத் திறந்து சலூன் கடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.